பிரிட்ஜை உடைத்த யானைகள் சாம்பார், சாதத்தை ருசித்தன
வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த முக்கோட்டுமுடி எஸ்டேட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 11 யானைகள் புகுந்தன. அவை 2 பிரிவாக பிரிந்து எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அலுவலர் குடியிருப்பை முற்றுகையிட்டன. கண்காணித்து வந்த வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த 6 யானைகள் தோட்ட அலுவலர் சிவகுமார் வீட்டை முற்றுகையிட்டு கதவு, ஜன்னல்களை உடைத்தன. சிவகுமாரும், மனைவியும் நள்ளிரவு ஒருமணியளவில் பக்கவாட்டு கதவு வழியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
தோட்ட தொழிலாளர் குடியிருப்பை அடைந்து, நடந்ததை தொழிலாளர்களிடம் கூறினர். குழுவாக வந்து யானைகளை தகரம் மற்றும் பந்தங்கள் வைத்து விரட்டினர். யானைகளை விரட்டிய பின், வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 10 ஜன்னல்களில் 4 கதவுகள் நொறுக்கப்பட்டிருந்தன. ஜன்னல் வழியாக அரிசி, காய்கறி, மற்றும் மளிகை பொருட்களை ருசித்த யானைகள், குளிர் சாதனப்பெட்டியை உடைத்து, உள்ளிருந்த சாம்பார், சாதம், மாவு, காய்கறிகளை ருசித்து உள்ளன. யானைகளின் இந்த தாக்குதல் வால்பாறை பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.