திருமணமான 25 நாளில் தாலியை ஆணியில் மாட்டிவிட்டு புதுப்பெண் திடீர் மாயம்
திருமானூர்: திருமணமான 25 நாளில் தாலியை கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு புதுப்பெண் திடீரென்று மாயமானது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் தேடிவருகின்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் காந்திநகரை சேர்ந்தவர் தியாகு (27). கூலிதொழிலாளி. இவருக்கும் உடையார்பாளையம் கீழநத்தம் காலனிதெருவை சேர்ந்த மேகலாவுக்கும் (23) கடந்த மாதம் 1ம் தேதி திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) இந்நிலையில் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பிப்பதற்காக தியாகுவின் சான்றிதழ்களை அவரது மாமனார் கேட்டிருந்தார். அதை கொடுப்பதற்காக மாமனார் வீட்டுக்கு தியாகு கடந்த 25ம் தேதி கீழநத்தம் சென்றார். மேகலா மட்டும் வீட்டில் இருந்தார்.
மாமனார் வீட்டில் இருந்து வீடு திரும்பினார் தியாகு. வீடு பூட்டியிருந்தது. மனைவியை காணவில்லை. பக்கத்து வீட்டில் விசாரித்தார். ‘‘நீங்கள் மாமனார் வீட்டுக்கு போயிருப்பதால் தானும் அங்கு போவதாக கூறிவிட்டு சென்றார்’ என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறி சாவியை கொடுத்தனர். வீட்டில் உள்ள அறையில் ஆணியில் மேகலா தனது தாலியை கழட்டி வைத்திருப்பதை பார்த்து தியாகு அதிர்ச்சியடைந்தார். மாமனார் வீட்டுக்கு மேகலா செல்லவில்லை என்றும் தெரியவந்தது. உறவினர், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் மனைவியை காணாததால் திருமானூர் போலீசில் தியாகு புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேகலாவை தேடிவருகின்றனர்.