Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
01
Mar
சிசிடிவிக்கு வில்லன்.. தடயத்தை அழிக்கும் மன்னன் : நாட்டையே கலக்கிய மகா கொள்ளையன் கோவை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை


கோவை: மனம் திருந்தி வாழ்ந்து வந்த டெல்லி மாஜி திருடன் தென்மாநிலங்களில் கைவரிசை காட்டி பிடிபட்டார். தமிழகத்தில் எங்கெங்கு திருடினார் என்று கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி கரவேல் நகரை சேர்ந்தவர் தேவேந்திரசிங் என்ற பந்திசோர் (43). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லியில் உள்ள சொகுசு பங்களாக்கள், நட்சத்திர ஓட்டல்களில் திருடுவதை வழக்கமாக கொண்டவர். கண்காணிப்பு கேமராவை செயலிழக்க செய்து திருடுவதில் கில்லாடி. தடயம், ஆதாரம் கிடைக்காத வகையில் திருடுவதில் ‘மன்னன்’. இவர் மீது பதிவான வழக்குகள் எண்ணிக்கை 212. சில வழக்குகளில் தண்டனையும் பெற்றவர். பந்திசோர் சம்பந்தப்பட்ட கேஸ் என்றால், துப்பு இல்லாமல் போலீஸ் திணறுவது வழக்கம்.

இவரது ‘திறமையை’ அறிந்த டெல்லி போலீசார், அவரை துப்பு துலக்கும் பணிக்கு பயன்படுத்த முடிவெடுத்தனர். ‘இதுவரை பதிவான வழக்குகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். டெல்லியில் நடக்கும் திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க உதவுங்கள்’ என்று திருடன் கையில் சாவியை கொடுத்தது டெல்லி போலீஸ். இதற்கு உடன்பட்ட பந்திசோர் திருட்டு தொழிலை 2008ல் கைவிட்டார். அவர் கொடுத்த பல முக்கியமான தகவல்கள், கொள்ளையர்களை பிடிக்க போலீசுக்கு பெரும் உதவியாக இருந்தது. அவரது கதையை மையமாக வைத்து ‘ஓயே லக்கி, லக்கி ஓயே’ என்ற பெயரில் இந்தி சினிமாவும் வந்தது. மும்பையில் நடந்த பிரபல பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார் பந்திசோர். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், பந்திசோருக்கு மீண்டும் திருட்டு மீது சபலம் தட்டியது. டெல்லி சரிப்படாது என்பதால் 2010ல் தென் மாநிலங்களில் ‘தொழிலை’ ஆரம்பித்தார்.

கடந்த 2 ஆண்டுகளில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என்று அவரது திருட்டு கைவரிசைகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. 4 மாநில போலீசாரும் பந்திசோருக்கு வலைவிரித்தனர். கடந்த ஜனவரி 21ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் பங்களாவில் கண்காணிப்பு கேமராவை செயலிழக்க செய்து அங்கு நிறுத்தியிருந்த ரூ.28 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் திருடுபோனது. இது பந்திசோரின் கைவரிசை என்பதை கேரள போலீசார் உறுதிப்படுத்தினர். காரில் தப்பிய பந்திசோரை கிருஷ்ணகிரி செக்போஸ்ட்டில் தமிழக போலீசார் மடக்கினர். காரை நிறுத்தி இறங்கிய அவர், போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பினார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பந்திசோர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.

கேரளா வரும் முன்பு கோவைக்கு வந்ததாகவும் கடந்த ஜனவரி 14ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் பி.என்.புரம் பகுதியில் 2 பெண்களிடம் தலா 5 பவுன் நகையை பறித்ததாகவும் தெரிவித்தார். இந்த தகவலை கேரள போலீசார் கோவை போலீசாருக்கு தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸில் வாக்கிங் சென்ற கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புனிதவதி(59), பி.என்.பாளையம் கே.என். புரத்தில் வாக்கிங் சென்ற ரங்கநாயகி(48) ஆகியோரிடம் பந்திசோர் நகை பறித்தது உறுதி செய்யப்பட்டது. அவரை கோவை பீளமேடு போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்று கேரள போலீசார் துப்பாக்கி பாதுகாப்புடன் பந்திசோரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்ற பீளமேடு போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் நடந்த எந்தெந்த திருட்டுகளில் பந்திசோருக்கு தொடர்பு உள்ளது என்பது விசாரணையில் தெரியவரும்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel