புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குரு இன்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 23ம் தேதி அவனது கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து அப்சல் குருவின் மரண தண்டனை இன்று காலை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் 5 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் டெல்லி காவல் துறையை சேர்ந்த 5 போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண் அதிகாரி, நாடாளுமன்ற ஊழியர்கள் இரண்டு பேர் மற்றும் தோட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தனர்.
பத்திரிகையாளர் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலன் இன்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது நாடாளுமன்ற கூட்ட தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். நாட்டின் உயர்ந்த அதிகார மையமாக கருதப்படும் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக கருதப்பட்டது. இந்த வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்த சிபிஐ ஒரு சில நாட்களிலேயே தீவிரவாதிகளுக்கு துணை போன அப்சல் குரு உள்பட 4 பேரை கைது செய்தது. இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திடமின்றி விசாரணை கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 4 பேருக்கும் 2002 டிசம்பர் 18ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2003 அக்டோபர் 29ம் தேதி டெல்லி ஐகோர்ட் இதனை உறுதி செய்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 4ல் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. கடந்த 2006ம் அக்டோபர் மாதம் அப்சல்குருவை தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. அப்சல்குரு சார்பாக அவரது மனைவி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இதை தொடர்ந்து அப்சல் குரு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக அப்சல்குருவின் கருணை மனு ஜனாதிபதி அலுவலகத்தில் நிலுவையில் இருந்தது. கடந்த ஆண்டு மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் புனேவில் உள்ள எரவாடா சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்டான். இதை தொடர்ந்து அப்சல் குருவையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என பாஜ, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
அப்சல் குரு கருணை மனு மீது விரைவில் முடிவு எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவித்தார். இந்நிலையில் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு கடந்த மாதம் 23ம் தேதி ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் கடந்த 26ம் தேதி அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நிராகரித்தார். இதை தொடர்ந்து அப்சல்குருவை தூக்கிலிடும் நடவடிக்கைகள் ரகசியமாக தொடங்கப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான். இதனை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா வரவேற்பு
நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை பாரதிய ஜனதா வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக பாஜ செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், ‘‘தண்டனை தாமதமாக நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதை வரவேற்கிறோம். இதற்காகத்தான் நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
டாக்டருக்கு படித்த அப்சல் குரு தீவிரவாதியானது எப்படி?
தீவிரவாதி அப்சல் குரு, காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரை சேர்ந்தவர். மருத்துவர் ஆக விரும்பி எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். ஆனால் ஒரு ஆண்டிலேயே படிப்பை கைவிட்டார். பின்னர் ஐஏஎஸ் தேர்வுக்காக தயார் செய்து வந்தார். இவர் கமிஷன் ஏஜென்ட்டாகவும் செயல்பட்டு வந்தார். அப்போது அனந்தநாக் பகுதியை சேர்ந்த தாரிக் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. காஷ்மீர் விடுதலை இயக்கத்தில் சேரும்படி அப்சல் மனதை தாரிக் மாற்றினார். குடும்பத்துக்கு பண உதவி செய்வதாகவும் கூறினார்.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பயிற்சிகள் பெற்றார். இந்தியாவில் நாடாளுமன்றம், தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டினர். இந்தியாவில், தற்கொலை படை தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான இடம் தேடும் பணி அப்சலிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணியை அப்சல் செய்து முடித்தார். நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே டெல்லி போலீஸ் அவரை கைது செய்தது.
ஸ்பீடு போஸ்ட் மூலம் குடும்பத்துக்கு தகவல்
அப்சல் குருவை தூக்கிலிடுவது குறித்து அவரது குடும்பத்தாருக்கு ஸ்பீடு போஸ்ட் மற்றும் பதிவு தபாலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் காஷ்மீர் மாநிலம், சோப்பூரிலுள்ள அவரது குடும்பத்தாருக்கு கிடைத்ததா என்பதை காஷ்மீர் டிஜிபி மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது. அப்சல் குரு தூக்கிலிடப்படும் விவரங்கள் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு ரகசியம் காக்குமாறு கூறப்பட்டது. அப்சலை தூக்கிலிடுமாறு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து திகார் சிறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் சிறை விதிகள்படி அவரை தூக்கிலிடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
சிறையிலேயே உடல் புதைப்பு
அப்சல் குரு உடல் திகார் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. அவரது உடலை கோரி குடும்பத்தாரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வராததை தொடர்ந்து சிறை நிர்வாகம் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப், கடந்த நவம்பர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலும் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் நிராகரித்த 2வது கருணை மனு
இந்திய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்று 6 மாதங்களில் 2 தீவிரவாதிகளின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை நவம்பர் 5ம் தேதி நிராகரித்தார். தற்போது அப்சல் குருவின் கருணை மனு கடந்த 3ம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு அஜ்மல் தூக்கிலிடப்பட்டார். தற்போது பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு அப்சல் தூக்கிலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.