வீரப்பன் படத்துக்கு சிக்கல் தீர்ந்தது
சென்னை: சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய ‘வனயுத்தம் படத்துக்கு சிக்கல் தீர்ந்தது. இம்மாதம் படம் ரிலீஸ் என்றார் இயக்குனர். இது பற்றி ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியது: சந்தன கடத்தல் வீரப்பனின் கதையாக இது உருவாகி இருக்கிறது. இதற்காக போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களை சந்தித்து பேசி அதன் அடிப்படையில் ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டது. நடந்த சம்பவங்களை இப்படம் சொல்லும். சில காட்சிகளுக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அவை நீக்கப்பட்டன. அதுபோல் சில வசனங்களும் நீக்கப்பட்டிருக்கிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே உண்மையான கதாபாத்திரங்கள்.
யார் மனதையும் புண்படுத்தாத அளவுக்கு காட்சிகள் படமாகி உள்ளன. வீரப்பனாக கிஷோர் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி விஜயகுமாராக அர்ஜுன் நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். வீரப்பன் வேடத்தை ஏற்பதற்கு முன் கிஷோர் அந்த கேரக்டரின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன என்பதை பயிற்சியாக மேற்கொண்டார். வீரப்பன் எப்படி நடப்பார்? எப்படி பேசுவார்? என எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தும், தெரிந்தவர்களிடம் கேட்டும் அதை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். இப்படம் இம்மாதம் 14ம் தேதி ரிலீஸ். இவ்வாறு இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் கூறினார்.