பேய் பார்த்ததால் வீடுகள் எரிந்ததா? : பீதியில் மேல்மலையனூர் மக்கள்
மேல்மலையனூர்: மேல்மலையனூரில் 5 குடிசை வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. பேய் பார்த்ததால் குடிசைகள் எரிந்ததாக கிராம மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். இதற்காக பரிகார பூஜை நடத்த முடிவு செய்து உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குள்ளம்மாள். இவரது குடிசை வீடு, நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி தப்பினர். அப்பகுதி மக்கள் குடிசை வீட்டில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன், சுசிலா, தனபாக்கியம், புருஷோத்தமன் ஆகியோரது வீடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தீப்பிடித்தன.
தகவலறிந்த மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பணியில் ஈடுபட்டனர். அதற்குள் குடிசைகள் முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து குள்ளம்மாள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு குடுகுடுப்பைக்காரர் ஒருவர் வந்தார். 10 வீடுகள் தீப்பற்றி எரியும் என கூறினார். அதே போல் கடந்த மாதம் 5 வீடுகள் எரிந்தது. தற்போது 5 வீடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தீப்பிடித்துள்ளது. பேய் பார்த்ததால் தான் இது நடந்துள்ளது’ என்றார். அப்பகுதி மக்களும் பேய் பார்த்ததால் தான் வீடுகள் எரிவதாக கூறுகின்றனர். பேய் பீதியை போக்க கோயிலில் பரிகார பூஜை நடத்த முடிவு செய்து உள்ளனர்.