யாரையும் அறிமுகப்படுத்துவது என் வேலை இல்லை: மணிரத்னம்
‘யாரையும் அறிமுகப்படுத்துவது என் வேலை இல்லை’ என்றார் இயக்குனர் மணிரத்னம்.கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி புதுமுகங்களாக ‘கடல்’ படத்தில் அறிமுகமாகின்றனர். இதுபற்றி அவர் கூறியதாவது:
மீனவ கிராமத்து பின்னணயில் நடக்கும் கதை ‘கடல்’. வழக்கம்போல் இப்படத்துக்கும் திறமையை பரிசீலித்துத்தான் நடிகர்களை தேர்வு செய்தேன். கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர்கள் மிக முக்கியம். பொருத்தமானவர்கள் கிடைத்துவிட்டால் என் வேலையில் 50 சதவீதம் முடிந்துவிட்டதாக அர்த்தம். வேடமும், கதையும் நம்பத் தகுந்ததாக இருக்க வேண்டுமென்றால் சரியான நட்சத்திரங்கள் நடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும்போது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் யார் என்பது மட்டும்தான் என் சிந்தனையில் இருக்கும். இதில் பிரபல நடிகர்களின் மகன், மகள் நடிப்பது என்பது பொருந்தி வந்தது என்பதுதான் உண்மை.
எனது வேலை படம் உருவாக்குவதுதான் யாரையும் அறிமுகப்படுத்துவது என் வேலை இல்லை. புதுமுகம் அல்லது டெக்னிஷியனை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தால் என்னைப்போல் வேலையில் ஆர்வம் உள்ளவர்களைத்தான் தேர்வு செய்வேன். கேரக்டர்கள் என்பது காகிதத்திலோ அல்லது லேப்டாப்பிலோ உருவாக்குவது கிடையாது. சூழ்நிலைக்கு ஏற்பவே கதாபாத்திரங்கள் அமையும். இதில் நடிப்பவர்கள் தங்கள் ஈடுபாடை காட்ட வேண்டும். இதை தவிர்த்து என்னை திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது தங்களுக்கு தாங்களோ திருப்திபட்டுக்கொள்வதற்காகவோ நடிக்கக்கூடாது.
இவ்வாறு மணிரத்னம் கூறினார்.