திருவொற்றியூர்:கை, கால்களை கட்டி போட்டு வாயில் துணியை திணித்து மூதாட்டியிடம் 17 பவுன் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். எண்ணூரில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் தெய்வானை (70). இவரது மகன்கள் மாரிமுத்து, முருகன். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது, தாயுடன் மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
நேற்று காணும் பொங்கல் என்பதால் மதியம் மனைவி, பிள்ளைகளுடன் வெளியே சென்று விட்டார் மாரிமுத்து. தெய்வானை மட்டும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் இரவு 10 மணியளவில் தெய்வானை வீட்டுக்கு வாலிபர் ஒருவர் வந்தார். ‘உங்க மகன் இருக்கிறாரா, அவரது நண்பன் நான்Õ என கூறியுள்ளார். அதற்கு தெய்வானை, ‘குடும்பத்துடன் மாரிமுத்து வெளியே சென்று விட்டான்Õ என்று கூறியுள்ளார்.
தெய்வானையிடம் பேச்சு கொடுத்தபடியே அவரது அருகில் சென்ற அந்த வாலிபர், திடீரென கழுத்தில் கத்தியை வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர் திடுக்கிட்டு சத்தம் போட்டார். அந்த மர்ம நபர், ‘சத்தம் போட்டால் குத்தி விடுவேன்Õ என மிரட்டியுள்ளார். பின்னர் வாயில் குத்தினார். இதில் அவரது பற்கள் விழுந்தது. இதையடுத்து ஒரு துணியை எடுத்து அவரது வாயில் திணித்து கை, கால்களை கயிற்றால் கட்டினார். இதையடுத்து அவரது கழுத்தில் கிடந்த 17 பவுன் செயினை அறுத்துக் கொண்டு தப்பினார். வெளியே சென்றிருந்த மாரிமுத்து மற்றும் குடும்பத்தினர் இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்தனர். தெய்வானை இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து பதறினர். கட்டுகளை அவிழ்த்து, விசாரித்தனர்.
இது குறித்து எண்ணூர் போலீசில் மாரிமுத்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.