கொச்சி போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி கொண்டிருந்த இந்திய அணிக்கு கேப்டன் டோனி தடுப்பு சுவர் போன்று நின்று சரிவை தடுத்தார். அவருடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். என்றாலும் அதிக ரன்களை சேர்த்தால்தான் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும் என்ற நிலையில் 41வது ஓவரில் களமிறங்கினார் ஜடேஜா.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த ஜடேஜா 37 பந்துகளில் 61 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அவருடைய ஆட்டம் எதிர்முனையில் நின்ற டோனியை வெகுவாக கவர்ந்தது. பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ரூட், கிரிஸ்வோக்ஸ் ஆகியோரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றி இந்திய வெற்றிக்கு வித்திட்டார். அவரது ஆட்டம் குறித்து கேப்டன் டோனி கூறியது: ஜடேஜாவின் அதிரடி ரன்குவிப்பு இந்திய அணிக்கு தேவையாக இருந்தது. பவுலிங்கிலும் அவர் தன் பங்கை திறம்பட வெளிப்படுத்தினார். அவர் அதிக ரன்கள் சேர்த்தால் மிடில் ஆர்டரில் நெருக்கடி குறையும். அவரால் பெரிய சிக்சர்களை அடிக்க முடியும். மொத்தத்தில் அவருடைய ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. இவ்வாறு டோனி கூறினார். ஜடேஜா குறித்து இங்கிலாந்து கேப்டன் குக் கூறுகையில், ஜடேஜா ஒரு சிறந்த வீரர். அவர் அவ்வாறு இருப்பதால்தான் உள்ளூர் போட்டிகளில் முச்சதங்கள் அடிக்க முடிகிறது. டோனியுடன் ஜோடி சேர்ந்து குவித்த ரன்களால் ஆட்டம் எங்கள் கையைவிட்டு போய்விட்டது என்றார்.