ஆலங்குடி அருகே பசுவுக்கு வளைகாப்பு: உறவினர்கள் மொய்
ஆலங்குடி அருகே பசு மாட்டுக்கு வளைகாப்பு நடைபெற்றது. உறவினர்கள் மொய்வைத்து விருந்து உண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மேற்பனைக்காடு ராஜாளி குடியிருப்பைச் சேர்ந்தவர் சன்னாசி. இவர் தனது பசு மாட்டுக்கு மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள மழைமாரியம்மன் கோயிலில் வளைகாப்பு நடத்தப்போவதாக முக்கியப் பிரமுகர்கள், உறவினர்கள் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
அதன்படி கடந்த 13ம் தேதி பசுமாட்டுக்கு வளைகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மெய்யநாதன் வெள்ளிக்காப்பை எடுத்துக் கொடுக்க ஊராட்சி மன்றத் தலைவர் துரைகோவிந்தராஜன் பசு மாட்டின் கொம்பில் அணிவித்து விழாவை துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த சன்னாசியின் உறவினர்களும் நண்பர்களும் பசுவிற்கு மஞ்சள், குங்குமம் தடவி வணங்கி மகிழ்ந்தனர்.
இதனை தொடர்ந்து அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மெய்யநாதன் உள்பட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் மொய் வைத்து விருந்து உண்டு சென்றனர். இதுகுறித்து சன்னாசி கூறுகையில் ‘40 வருடமாக மாடு வளர்த்து வருகிறேன். அதனால் நான் முன்னேறியுள்ளேன். அந்த பாசத்தாலும், நன்றி கடனாகவும் நினைத்து எனது பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்தினேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்தி விருந்து வைத்தது அப்பகுதியினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.