சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியனை வழிபட்டு, புத்தாடை உடுத்தி, பொங்கலிட்டு நேற்று மக்கள் கொண்டாடினர். இன்று மாட்டுப் பொங்கல். கிராமங்களில் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, படையலிட்டு மக்கள் படுஉற்சாகத்துடன் கொண்டாடினர். விளையாட்டுப் போட்டிகள், ஜல்லிக்கட்டு என தமிழர் திருநாளை மக்கள் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்கள், கிராமங்களிலும் உற்சாக கொண்டாட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில், கடற்கரை, பூங்கா, பொழுதுபோக்கு இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். மெரினா பீச்சில் கடந்த ஆண்டில் காணும் பொங்கலன்று 5 லட்சம் பேர் வரை திரண்டனர். இந்த ஆண்டும் அதே அளவில் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு திருட்டு குற்றங்களில் ஈடுபடுவோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களை உஷார்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருவதற்கு ஆண் மற்றும் பெண் போலீசார் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருட்டை தடுக்கவும் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர்கள் ஏ.கே.கிரி, பவானீஸ்வரி, லட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடலில் குளிக்க போலீசார் தடை
மாமல்லபுரம் கடற்கரையில் குளிக்க போலீசார் தடை போட்டுள்ளனர். கடற்கரையில் சவுக்கு கட்டைகளை கட்டி தடை ஏற்படுத்தி உள்ளனர். கடலில் குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். மீறி குளிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை, கோவளம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை போட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையம், முட்டுக்காடு படகு துறை, முதலை பண்ணை மற்றும் முதலியார்குப்பம் படகுத்துறை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook