புதுடெல்லி: காஷ்மீர் எல்லையில் 4வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்திய வீரர்களும் அதிரடியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லையில் இருநாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறி பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ முகாம்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கடந்த செவ்வாய்க் கிழமை பாகிஸ்தான் படையினர் இந்திய பகுதிக்குள் ஊடுருவி 2 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். அவர்கள் தலையையும் துண்டித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காஷ்மீரின் மென்டார் பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. நேற்று மாலை கிருஷ்ணா காடி மற்றும் சோனா காலி பகுதிகளில் 8 இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. விடிய விடிய நீடித்த துப்பாக்கி சூட்டுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இரவு பகலாக கடும் பனியிலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வீரர்கள் எல்லையில் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் சரத் சபர்வாலை அந்நாட்டு அரசு அழைத்து, இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஒரு பாகிஸ்தான் வீரர் பலியானதுக்கு கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்தே பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எல்லை பகுதியில் பெரிய அளவில் படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. விடுமுறையில் உள்ள ராணுவத்தினர் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், ராணுவ தலைமை தளபதி பிக்ராம் சிங் மற்றும் உயரதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பின், இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் பதற்றம் நீடிப்பதால், சரக்கு லாரி போக்குவரத்தை பாகிஸ்தான் ஏற்கனவே நிறுத்தியது. நேற்று பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது. இதனால் இந்திய பகுதியில் 65 பாகிஸ்தானியரும், பாகிஸ்தான் பகுதியில் 58 இந்தியர்களும் தவித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook