கொழும்பு: இலங்கையில் முதல் பெண் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிபர் ராஜபக்சேவை கண்டித்து வக்கீல்கள் கடும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயகே. கடந்த 2011ம் ஆண்டு மே 18ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல், சொத்து கணக்கு வெளியிடாதது உள்பட 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து, ஷிராணி மீதான குற்றச்சாட்டை விசாரித்து அறிக்கை அளிக்க ஆளும் கட்சியை சேர்ந்த 7 எம்.பி.க்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 4 எம்.பி.க்களை கொண்ட நாடாளுமன்ற குழுவை அதிபர் ராஜபக்சே அமைத்தார். இக்குழு தீவிர விசாரணை நடத்தி, ஷிராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று அரசிடம் அறிக்கை அளித்தது. இதை கண்டித்து இலங்கை வக்கீல்கள், எதிர்க்கட்சிகள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி ஷிராணிக்கு எதிரான கண்டன தீர்மானம், இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வரப்பட்டது. கடந்த 2 நாட்களாக தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது. இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த கூடாது என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி பேசினர். எனினும் நேற்று கண்டன தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் சாமல் ராஜபக்சே கூறுகையில், Ôதலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ஆதரித்து 155 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர். எதிர்த்து 45 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுÕ என்றார். இதையடுத்து, ஷிராணியை பதவி நீக்கம் செய்ய அதிபர் ராஜபக்சே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஷிராணியின் கணவர் பிரதீப் கரியவாசம் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்தும் தனி விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook