ஆவடி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2 கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் சேதம் ஏற்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் அருகே பிளாஸ்டிக் பை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு 40க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். நேற்று இரவு டூட்டியில் 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர். இன்று அதிகாலை கம்பெனியில் உள்ள மூலப்பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பல லட்சம் மதிப்பு மூலப்பொருட்கள் எரிந்து விட்டது. அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பால்பண்ணை அருகே சாயப்பட்டறையில் 30க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இதன் உரிமையாளர் மோசஸ். நேற்று மாலை வேலை முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு கிளம்பினர். அப்போது கம்பெனியில் உள்ள ரையர் மெஷன் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. ஊழியர்களால் தீயை அணைக்க முடியாததால் கம்பெனி முழுவதும் தீ பரவியது. தொழிற்பேட்டையில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பு மெஷின்கள் எரிந்தது. இந்த தீ விபத்துகள் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.