இந்தியா இங்கிலாந்து அணிகள் நேற்று முதல் ஒருநாள் போட்டியில் ராஜ்கோட்டில் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன் குவித்தது. குக் 75, இயான்பெல் 85, பீட்டர்சன் 44, சமீத்படேல் 44, மோர்கன் 41 ரன் விளாசினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. யுவராஜ்சிங் 61, ரெய்னா 50, காம்பீர் 52, ரகானே 47, டோனி 32, புவனேஸ்வர் குமார் 20, கோக்லி 15, அஸ்வின் 13 ரன் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் டிரேடுவெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.
டெர்ன்பேக், பிரஸ்னன் தலா 2, ஸ்டீவன்பின் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது டிரேடுவெல்லுக்கு வழங்கப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் சரமாரியாக ரன்னை வாரி வழங்கியதால் இங்கிலாந்து அணி இமாலய ரன்னை குவித்தது. கடைசி 4 ஓவர்கள் மட்டும் இங்கிலாந்து அணி 59 ரன்கள் குவித்து மிரட்டியது. இந்த 4 ஓவர் தான் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இல்லையென்றால் இங்கிலாந்து அணி 280 ரன்களுக்குள் மடக்கியிருக்கலாம். நேற்றைய ஆட்டத்தில் ஷாமி அகமதுவை களமிறக்காமல் டின்டாவுக்கு வாய்ப்பு கொடுத்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷாமி அகமது 9 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குழப்பத்தை ஏற்படுத்தியது. தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில், கடைசி கட்டங்களில் அதிக ரன்களை வாரி வழங்கியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்த ஆட்டத்தில் எல்லா பேட்ஸ்மேன்களுமே ரன் குவித்துள்ளனர். அதுவரையிலும் சந்தோஷம் தான். கடைசி 10 ஓவர்களில் அதுவும் 5 பீல்டர்கள் இன்னர்சர்க்கிளில் நிற்கும்போது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். அதை நாங்கள் செய்ய தவறிவிட்டோம். நான் கூடுதலாக 2 ஓவர்கள் களத்தில் நின்றிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.
இந்த மைதானத்தில் 280 முதல் 290 ரன்கள் வரை தான் குவிக்க முடியும். ஆனால் 325 ரன்கள் மிக அதிகம். பந்தை தொட்டாலேயே பவுண்டரிக்கு சென்று விடுகிறது. அந்த அளவுக்கு அவுட் பீல்டு வேகமாக இருந்தது. டின்டா யார்க்கரை சிறப்பாக வீசுவார் என்பதால் அவரை களமிறக்கினோம். இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போதுதான் கற்று வருகின்றனர் என்றார். இங்கிலாந்து கேப்டன் குக் கூறுகையில், மைதானம் ரன்குவிப்புக்கு அருமையாக இருந்தது. டிரேடுவெல், சமீத்படேல் அசத்தி விட்டனர். இந்திய அணியும் போராடியது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை நாங்கள் வீழ்த்தியதால் அவர்களால் மீள முடியவில்லை என்றார். 2வது ஒருநாள் போட்டி 15ந் தேதி கொச்சியில் நடக்கிறது.