திருச்சி: திருச்சியில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகளுடன் சென்னைக்கு புறப்பட்ட வாலிபர் ரயில் நிலையத்தில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து ஈரோடு, கரூர், திருச்சி வழியாக சென்னைக்கு தினமும் இரவு 10 மணிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருக்கிறது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம்போல இந்த ரயிலில் செல்ல திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில்வே போலீசார், மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பெரிய டிராவல்ஸ் பேக்குடன் ஒரு வாலிபர் வந்தார்.
சந்தேகத்தின் பேரில் அவரது பேக்கை பாதுகாப்பு படை போலீஸ்காரர் கணேசன் ஸ்கேனர் மூலம் சோதனை போட்டார். அப்போது அதில் தங்க நகைகள் பெரும் அளவில் இருப்பதை பார்த்தார். எனவே அவர் வைத்திருந்த இன்னொரு டிராவல்ஸ் பேக்கையும் சோதனை போட்டார். அதிலும் தங்க நகைகள் இருந்தது. இரு பேக்குகளிலும் இருக்கும் நகைக்கான ரசீது, ஆவணங்கள் இருக்கிறதா என கணேசன் கேட்டார். இதனால் பயந்துபோன அந்த வாலிபர் ஒரு பேக்கை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். உஷாரான பாதுகாப்பு படை போலீஸ்காரர் கணேசன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் ஆன்டனியிடம் ஒப்படைத்தனர். தங்க நகைகளுடன் பிடிபட்ட அந்த வாலிபர் பெயர் மனோஜ்(30). திருச்சி சின்ன சவுராஷ்ட்ரா தெருவில் நகைக்கடை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்தது.
இது தவிர நகைகள் செய்து முக்கிய நகரங்களில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாகவும் தற்போது சென்னையில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு செல்வதாகவும் மனோஜ் தெரிவித்தார். ஆனால் அந்த நகைக்கான பில்கள் எதுவும் இல்லை. எனவே போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்ட அனைத்து நகைகளும் காதுகளில் மாட்டும் பல்வேறு டிசைன் தோடுகள், மாட்டல்கள் ஆகும். அதன் மொத்த எடை 9 கிலோ 56 கிராம். மதிப்பு ரூ3 கோடி இருக்கும். பிடிபட்ட வாலிபரை பாதுகாப்பு படையினர் ரயில்வே போலீசார் வசம் ஒப்படைத்தனர். தற்போது ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரமும் திருச்சி ரயில் நிலையத்தில் ஒன்றரை கிலோ தங்கத்துடன் ஒருவர் பிடிபட்டார். அவர் உரிய ஆவணங்களை கொடுத்தபின் நகைகளை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook