மகன் தலை கிடைக்கும்வரை எனக்கு அமைதியில்லை : ராணுவ வீரர் தாய் கதறல்
புதுடெல்லி: ‘எனது மகன் தலை கிடைக்கும் வரை எனக்கு அமைதி இல்லை‘ என காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தாய் கண்ணீரோடு கூறினார். காஷ்மீர் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பனி மூட்டத்தை பயன்படுத்தி 600 மீட்டர் தூரத்துக்கு ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டாக வெட்டினர். ஒருவரின் தலையை எடுத்து சென்று விட்டனர். பாகிஸ்தான் படையின் செயல் மனித தன்மையற்றது என கூறிய இந்தியா, அந்நாட்டு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தால் எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் படை தாக்குதலில் பலியான வீரர்களுள் ஒருவரான லேன்ஸ் நாயக் ஹேம்ராஜின் உடல் உ.பி. மாநிலம் மதுராவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஹேமராஜுக்கு தர்மாவதி என்ற மனைவியும், நிர்மலா (8), காலோ (3) என்ற மகள்களும் பிரின்ஸ் என்ற மகனும் உள்ளான். ஹேம்ராஜின் தாய் மீனா கூறுகையில், ‘என் மகனின் தலை கிடைக்கும் வரை எங்களுக்கு அமைதி கிடையாது. அவனது தலையை கூடிய விரைவில் மீட்டு தர வேண்டும்‘ என்று கண்ணீரோடு தெரிவித்தார்.