லாரி ஒப்பந்தம் புதுப்பிக்காததால் காஞ்சிபுரம், திருவள்ளூரில் கேஸ் சப்ளை பாதிக்கும் அபாயம்
மதுராந்தகம்: சிலிண்டர்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளின் ஒப்பந்தம் புதுப்பிக்க தாமதம் ஏற்பட்டு வருவதால் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கேஸ் சப்ளை பாதிக்கும் அபாயம் உள்ளது. மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து வர்த்தக, சமையல் சிலிண்டர்கள் லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 100க்கு மேற்பட்ட லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. சிலிண்டர் லோடுகளை கேஸ் ஏஜென்சிகளுக்கு சப்ளை செய்வதற்காக லாரி உரிமையாளர்களுக்கு வாடகையாக குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மூன்று ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படுகிறது. படாளம் ஐஓசியில் லோடு ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கான ஒப்பந்தம் கடந்த 8ம் தேதி முடிந்தது. இதை தொடர்ந்து ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஐஓசி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. இதனால் லாரிகளில் கேஸ்களை ஏற்றாமல் நிறுத்தி வைத்துள்ளனர். மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய லாரிகள் செல்லவில்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம். நிறுவன அதிகாரிகள் உடனடியாக புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தொடர்ந்து லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.