திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு, கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கோரிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டிடம், சாலை சீரமைப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் சவுடு மண், கிராவல் மண் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வட்டார மணல்லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில் ஆந்திராவில் இருந்து சவுடு மண் எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆந்திராவில் 1 லோடுக்கு ரூ.2500க் கொடுக்க வேண்டியது உள்ளது. போக்குவரத்து செலவு, டிரைவர், கிளீனர் சம்பளம் உள்பட பல்வேறு செலவு காரணமாக 1 லோடு சவுடு மண் ரூ. 7 ஆயிரம் வரை விற்பனை செய்ய வேண்டி நிலை உள்ளதாக கூறுகிறார்கள்.
ஆந்திராவில் இருந்து மணல் லோடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும்போது முறையான பில் இருந்தும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், லாரி டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, வண்டியை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சம்பவம் நடக்கிறது. இதனால் 2000க்கு மேற்பட்ட லாரிகள் இயங்காத நிலை உள்ளது. ஆந்திராவில் சவுடு, கிராவல் பெற 20 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு, கிராவல் மண் குவாரியை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என்று வட்டார மணல் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தசரதன், சதீஷ்குமார், பழனி ஆகியோர் கலெக்டர் வீரராகவராவிடம் மனு கொடுத்துள்ளனர்.