சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி பெறும் ஒரு கோடியே 84 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான மற்ற பொருட்கள் வாங்க ரூ.100 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 33,490 ரேஷன் கடைகளிலும் நேற்று காலை முதல் ‘பொங்கல் பரிசு பை வழங்கும் பணி துவங்கியது. நேற்று ஒரு சில இடங்களில் அரிசி மற்றும் சர்க்கரை மட்டும் வழங்கி விட்டு ரூ.100 ரொக்கப்பணம் இன்னும் கடைக்கு வரவில்லை, பின்னர் தருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் காத்திருந்தனர். பணம் வழங்கிய பிறகு ரேஷன் கடைகளை விட்டு சென்றனர்.
அதேபோன்று பல ரேஷன் கடைகளில் நேற்று இரவு வரை பொங்கல் பை வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர். சிலருக்கு பொங்கல் பை வழங்கப்பட்டது. சிலருக்கு இன்று காலை வந்து வாங்கிக் கொள்ளும்படி ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து இன்று காலை 8.30 மணிக்கு 2வது நாளாக பொங்கல் பரிசு பை வழங்கும் பணி துவங்கியது. இதை வாங்குவதற்காக அதிகாலையிலேயே பொதுமக்கள் ரேஷன் கடைகளில் காத்து நின்றனர். பின்னர் கடை திறந்ததும், பொங்கல் பை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, “வருகிற ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலும், அன்றும் ரேஷன் கடை திறக்கப்பட்டு, பொங்கல் பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள், பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook