கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி வேலைநிறுத்தம் நீடிப்பு : ரூ.10.5 கோடி துணி உற்பத்தி பாதிப்பு
சோமனூர்: சீரான மின்வினியோகம் கோரி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 3வது நாளாக ஸ்டிரைக் தொடர்வதால் ரூ.10.5 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகள் மட்டும் 2 லட்சத்துக்கும் மேல் உள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடும் மின்வெட்டால், விசைத்தறி தொழில் வெகுவாக பாதித்துள்ளது.
தினசரி 16 மணி நேர மின்வெட்டு தொடர்கிறது. சமச்சீர் மின்சாரம், மின்கட்டண உயர்வு ரத்து, கைத்தறி சட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 முதல் 13ம் தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் தொடர் ஸ்டிரைக்கில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். இன்று 3வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது.
3 நாள் ஸ்டிரைக்கால் ரூ.10.5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறிகளில் கூலித்தொழிலாளர்களாக வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் இங்கு தங்கி பணிபுரிகின்றனர். தற்போது நிலவும் ஸ்டிரைக் வரும் 13ம் தேதி காலை 6 மணிக்கு முடிவடைந்தாலும், அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகை நடப்பதால் விசைத்தறிகள் விடுமுறை விடுவது வழக்கம். பொங்கலை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் தற்போதைய ஸ்டிரைக்கால் முன்கூட்டியே புறப்பட்டுள்ளனர்.