அர்ஜூன் சாதாரண வீரராகவே இருக்க வேண்டும் : சச்சின் உற்சாகம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். ஒருநாள் போட்டியில் அவர் தனது இன்னிங்சை முடித்த நிலையில், அவரது மகன் அர்ஜூன் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் உள்ளூர் போட்டி யில் கால்பதிக்க உள்ளார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்பை அணியில் அர்ஜூனுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை யில் தென்மண்டல அளவிலான போட்டியில் வருகிற 20ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் அர்ஜூன் மும்பை அணிக்காக களமிறங்குகிறார்.
கடந்த ஆண்டு நடந்த உள்ளூர் போட்டியில் ஜிம்கானா அணிக்காக ஆடிய அர்ஜூன் 124 ரன்கள் அடித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார். இடது கை பேட்ஸ்மேனான அர்ஜூன் மிதவேக பந்துவீச்சிலும் அசத்தக்கூடியவர். இப்போதே அவர் ஆல்ரவுண்டராக வலம்வர தொடங்கியுள்ளார். மும்பை அணியில் அர்ஜூனுக்கு இடம் கிடைத்தது குறித்து சச்சின் கூறுகையில்: மற்ற பெற்றோர்களை போல எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அர்ஜூன் மும்பை அணிக்காக ஆடுவதில் பெருமைப்படுகிறேன். அவனது கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. அணியில் அவனை சாதாரண வீரராகவே அனைவரும் கருத வேண்டும் என்றார்.