மதுரவாயல் பகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி
பூந்தமல்லி: சென்னை நகரின் முக்கிய பகுதியான மதுரவாயல் பகுதியில் கொள்ளை, வழிப்பறி சம்பவம் அதிகரித்து வருகிறது. மதுரவாயல் காமாட்சி நகரில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயி லில் நேற்று முன்தினம் இரவு கருவறையில் உள்ள டிரங்கு பெட்டி உடைத்து அதில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இங்கு கடந்த 2 மாதங்களில் 6க்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியல் உடைப்பு சம்பவம் நடந்துள்ளது. கேமராமேன் வீட்டில் திருட்டு சென்னை ஆழ்வார் திருநகர் சரஸ்வதி நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (34). புகைப்படக்காரர்.
மனைவி காயத்திரி (30). தம்பதிக்கு 2 வயது மகன் இருக்கிறான். இன்று அதிகாலை எழுந்தபோது வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது கண்டு தம்பதி திடுக்கிட்டனர். நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.2500 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஜெகநாதன் மதுரவாயல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். மதுரவாயல் பகுதியில் போலீஸ் ரோந்து பணி குறைவாக உள்ளதால் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். கூடுதல் போலீ சார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.