பீகாரில் இன்று பயங்கர விபத்து : லாரி கவிழ்ந்து 25 தொழிலாளர் பலி
அவுரங்காபாத்: தறிகெட்டு ஓடிய லாரி கவிழ்ந்து, விவசாய தொழிலாளர்கள் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலத்தில் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் டால்டோன் கஞ்ச் மாவட்டம் லெசி கஞ்ச் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் 35 பேர், அறுவடை பணிக்காக அவுரங்காபாத்துக்கு சென்றனர். பணி முடிந்ததை அடுத்து இன்று அதிகாலை சொந்த கிராமத்துக்கு லாரியில் திரும்பினர். டிடாய் பிக்கா கிராமம் அருகே லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடியது. பின்னர் தலை குப்புற கவிழ்ந்து ரோட்டோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
இந்த பயங்கர விபத்தில் 25 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அவுரங்காபாத் எஸ்பி தல்ஜீத் சிங் தெரிவித்தார். ஒரே கிராமத்தை சேர்ந்த 25 தொழிலாளர்கள் விபத்தில் பலியாகி உள்ளது பீகார் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.