மயிலாடுதுறை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதாலும், காவிரியில் தண்ணீர் இல்லாததாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. செப்டம்பர் 17ம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணை தண்ணீரை நம்பி சம்பா சாகுபடி செய்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் கருகி விட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பல விவசாயிகள் இறந்தனர். சிலர் பயிர் கருகியதாலும், கைமுதலும் இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அரசு உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், தாமோதரன், நத்தம் விஸ்வநாதன், ஜெயபால், செல்லூர் ராஜூ, வைத்திலிங்கம், காமராஜ், கே.பி.முனுசாமி ஆகிய 8 பேரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முனியநாதன், சிவதாஸ் மீனா உள்ளிட்ட 17 பேரும் இடம் பெற்று உள்ளனர்.
இந்நிலையில் இன்று உயர்நிலை ஆய்வுக்குழு டெல்டா மாவட்ட சேதப்பகுதிகளை பார்வையிட சுற்றுப்பயணத்தை தொடங்கியது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த காளியப்பநல்லூரில் இருந்து ஆய்வு பயணத்தை தொடங்கினர். இவர்கள் கருகிய பயிர்களை பார்த்து அந்தந்த பகுதி விவசாயிகளிடம் விசாரித்தனர். விவசாயிகள் ஆங்காங்கே திரண்டு வந்திருந்து செலவு செய்த பணம் எல்லாம் வீணாகிவிட்டது என கண்ணீர் மல்க கூறினர். அவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் அங்கிருந்து தரங்கம்பாடி, தெத்தி, ஆகியபகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து நாகை மாவட்டத்தில் ஈசனூர், ஆலங்குடி, மணக்குடி, வாய்மேடு ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook