ஷூட்டிங் முன்பே கார்த்திக் மகனுடன் நடிப்பு பயிற்சி பெற்ற துளசி
சென்னை; ஷூட்டிங்கிற்கு முன்பே கார்த்திக் மகனும், நானும் ஒன்றாக நடித்து பயிற்சி பெற்றோம் என்றார் துளசி. ராதா மகளும், ‘கோ கார்த்திகா தங்கையுமான துளசி, ‘கடல் படத்தில் அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது: சுகாசினியும், எனது அம்மா ராதாவும் நெருங்கிய தோழிகள். ‘கடல் படத்தில் கார்த்திக் மகன் கவுதமுடன் என்னை அறிமுகப்படுத்துவதற்காக இயக்குனர் மணிரத்னம் மனதில் நினைத்திருந்தார். இது தொடர்பாக எனது அம்மாவிடம் இயக்குனர் போனில் பேசினார். என்னிடம் அம்மா கேட்டார். முதலில் நம்பவே முடியவில்லை. எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக நடிக்க சம்மதித்துவிட்டேன். இதையடுத்து நடிப்பு பயிற்சி மற்றும் சில நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின்போது கவுதமும் நானும் எங்களது வேடம்பற்றி நடித்து பயிற்சி பெற்றோம். இது கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்துகொள்ள உதவியது. மணிரத்னம் இயக்கத்தில் பணியாற்றியது அதிசயமாகவும், ஆசிர்வாதமாகவும் இருந்தது. அவர் காட்டிய அன்பால் ஷூட்டிங்கில் இருப்பதுபோன்ற உணர்வு இல்லாமல் சவுகரியமாக உணர்ந்தேன். கேமரா முன் என்னை யதார்த்தமாகவே இருக்கச் சொன்னார். எனது நடிப்பு விஷயத்தில் அம்மாவோ. அக்கா கார்த்திகாவோ தலையிடவில்லை. முழுமையாக எனது சுதந்திரத்துக்கு விட்டுவிட்டார்கள். அம்மா, அப்பாவின் துணையால் நான் நடிக்க வந்திருக்கிறேன். அவர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள். நடிப்பதுடன் படிப்பையும் கைவிடவில்லை.