குற்றத்தை செய்து விட்டு தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. மனசாட்சி விடாது. உறுத்தும். அல்லது ஏதாவது ஒரு வழியில் தண்டனை கிடைக்கும். அப்படித்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொன்றவர் இப்போது போலீசில் சரணடைந்துள்ளார். இறந்துபோன மனைவி கனவில் தினமும் வந்து பயமுறுத்துவதாகக் கூறி கொலையை ஒப்புக் கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிவகிரி ராசபாளையத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி அமுதா. கோவை சோமனூர் அடுத்த பொன்னாண்டாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். மில்லில் அழகர்சாமி பணி புரிந்தார். அங்கு பணியாற்றிய இளம்பெண்ணுடன் அழகர் சாமிக்கு தொடர்பு ஏற்பட்டது. ‘மனைவியை விட்டு பிரிந்து வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என அப்பெண் கூறி உள்ளார்.
பின்னர் அழகர்சாமியின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை கைவிட்டார். இந்நிலையில் அழகர்சாமியின் மனைவி அமுதா திடீரென மாயமானார். போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அழகர்சாமி, சொந்த ஊருக்கு சென்றார். அங்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள் உள்ளன. அமுதா மாயமாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு அழகர்சாமி கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம் வந்து ‘நான் தான் அமுதாவை கொன்றேன். மில்லில் பணிபுரிந்த பெண்ணை மணக்கும் நோக்கத்தோடு, அமுதாவை அருகில் உள்ள சென்னியாண்டவர் கோயில் கிணற்றில் தள்ளி கொன்றேன். இறந்த அமுதா தினமும் கனவில் வந்து பயமுறுத்துகிறார். இதனால் சரண் அடைந்துள்ளேன் என கூறினார். இதற்கிடையே, வாஸ்து சரியில்லை எனக்கூறி, அமுதா கொல்லப்பட்ட 150 அடி ஆழ கிணற்றை கோயில் நிர்வாகம் மூடிவிட்டது.
தற்போது கிரேன் உதவியுடன் கிணற்றை தோண்டும் பணியை துவங்கியுள்ளனர். ஆதாரம் கிடைத்ததும் அழகர்சாமி மீது கொலைவழக்கு தொடரப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இளம் பெண்ணை மணப்பதற்காக மனைவியை கொலை செய்தவர், கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல், இன்னொரு பெண்ணை மணந்திருக்கிறார். அவருக்கு 2 குழந்தைகளும் பிறந்திருக்கின்றன. ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப் பிறகு பயம் வந்திருக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த பாதிப்பின் காரணமாக கனவில் மனைவி வந்து பயமுறுத்தியிருக்கிறார். இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டு போலீசில் சரணடைந்துவிட்டார். குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கிடையாது. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.