நிலம், வீட்டின் மதிப்பு கிடுகிடுவென ஏற ஆரம்பித்ததில் இருந்து சொத்தை வளைக்க மோசடிகள், போலி பத்திரம், கொலை ஆகியவையும் அதிகரித்து விட்டன. சென்னையில் வாரிசு இல்லாத சொத்துக்களை வளைக்க, போலீசார் துணையுடன் போலி பத்திரம் தயாரித்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. பாஸ்போர்ட், சான்றிதழ், பத்திரம் போன்றவை தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்டவர்கள் அதுபற்றி போலீசில் புகார் கொடுப்பார்கள். குறிப்பிட்ட நாள் வரை போலீசார் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காணாமல் போன பொருளை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் தருவார்கள். அந்த சான்றிதழை, புகார் கொடுத்தவர் ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக ஒருவர் போலீசில் புகார் செய்து, போலி சான்றிதழ் பெற்றதாக உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதுகுறித்து விசாரணை நடந்தது. தீவிர விசாரணைக்கு பிறகு, செல்வம் என்பவரை போலீசார் பிடித்தனர். போலி ஆவணத்தை செல்வம் தயாரித்து கொடுப்பார். சென்னை எம்.கே.பி.நகர் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவர், புகார் பதிவு செய்து, கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் கொடுப்பார். இதற்கு காசிமேடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ள ஒருவரும் உடந்தையாக இருந்தார் என்று தெரியவந்தது. இவர்கள், சென்னையில் வாரிசு இல்லாத சொத்துக்களுக்கு பத்திரத்தை காணவில்லை என்று புகார் கொடுத்து, போலீஸ் சான்றிதழ் மூலம் போலி பத்திரங்களை தயாரிப்பார்கள். அதை வைத்து சொத்துக்களை ஏமாற்றி விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ஏட்டுகள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நில மோசடியை பொருத்தவரை பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்களே பல நேரங்களில் மோசடிக்கு துணை போகிறார்கள். சில ஆயிரங்களை வாங்கிக் கொண்டு பல லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கு போலி பத்திரம் தயாரித்து கொடுக்கிறார்கள். இந்தக் கும்பலுடன் சில போலீசாரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வரும்போது இது சிவில் வழக்கு, கோர்ட்டுக்கு செல்லுங்கள் எனக் கூறி அனுப்பி விடுவார்கள். அதற்குள் போலி பத்திரம் மூலம் அந்த சொத்து பல கை மாறிவிடும். கடைசியில் சமாதானம் செய்வது போல் பேசி, சில லட்சங்களை கறந்து விடுவார்கள். இப்படி வரும் மோசடி பணமே பல கோடிகளைத் தாண்டி விடுமாம். அந்தப் பணத்தில் அப்பாவிகளை ஏமாற்றும் இந்தக் கும்பல்கள் கொழித்து வருகின்றன.