ஓடும் பஸ்சில் மாணவி பலாத்காரம் : நண்பருடன் சேர்த்து வெளியில் வீசியது கும்பல்
புதுடெல்லி: டெல்லியில் நண்பருடன் பஸ்சில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் இருவரையும் பஸ்சில் இருந்து வெளியில் தூக்கி வீசியது. இதனால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. காரில் இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. கல்லூரி மாணவிகளிடம் ஈவ் டீசிங் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஓடும் பஸ்சில் மாணவியை ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பாராமெடிக்கல் படித்து வந்த 23 வயது கல்லூரி மாணவி, பயிற்சிக்காக டெல்லிக்கு வந்திருந்தார். அவரது நண்பர் டெல்லியில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இருவரும் நேற்று இரவு முன்ரிகா பகுதியில் இருந்து துவாரகா செல்லும் பஸ்சில் ஏறினர். மகிபால்பூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் திடீரென மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றது. தடுக்க வந்த நண்பரை அடித்து உதைத்தனர்.
மாணவியை பலாத்காரம் செய்த கும்பல், அவரையும் நண்பரையும் பஸ்சில் இருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியது. பாதிக்கப்பட்ட மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். மாணவி, நண்பர் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. பலாத்காரம் நடந்த போது டிரைவர் ஏன் பஸ்சை நிறுத்தவில்லை, கண்டக்டர் என்ன செய்து கொண்டிருந்தார், பயணிகள் யாரும் இல்லையா என்பது போன்ற விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.