செங்கம் காவல் நிலையத்தில் மனநிலை பாதித்த போலீஸ்காரர் ரகளை
செங்கம்: தி.மலை மாவட்டம் செங் கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன்(45). சீனுவாசன் செங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவ விடுப்பில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியான நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டாராம். இதனால் தொடர்ந்து அடிக்கடி பணிக்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் காவலர் சீனுவாசன் நேற்று காவல் நிலையம் முன் வந்தார். திடீரென கூச்சல் போட்ட அவர், காவல் நிலையத்தின் மீது கற்களை எடுத்து வீசினார். இதில் காவல் நிலைய கண்ணாடிகள் உடைந்து சிதறியது. தன்னை யாரும் பிடிக்காத வகையில் அருகில் வந்தவர்கள் மீதும் கற்களை வீசியுள்ளார்.
திடீரென ஆவேசமான சீனுவாசன் தனது பைக்கை கீழே தள்ளி விட்டார். அதிலிருந்து பெட்ரோல் கசிந்தது. அதை பற்றவைக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களை தள்ளிவிட்டு ஓடினார். சம்பவத்தை பார்த்துக்கொண்டு இருந்த பொதுமக்கள் உதவியுடன் 10க்கும் அதிகமான போலீசார் சீனுவாசனை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கும் அவர் கூச்சல் போட்டபடி ரகளையில் ஈடுபட்டார். இதனால், போலீசார் அவரது கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு படுக்க வைத்தனர். தொடர்ந்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், சீனுவாசனை வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.