உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் இப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் இரு குழந்தைகள் இறந்துள்ளனர். உடன்குடி புதுமனை கோட்டைவிளையைச் சேர்ந்த முத்து கவிதா(6) என்பவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். காய்ச்சல் காரணமாக நேற்று மதியம் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு டாக்டர் ஊசி போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுமியை வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றனர். திடீரென்று மருத்துவமனை வாசலிலேயே சிறுமி மயங்கி விழுந்தாள். அவளை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஊசி போட்டதால் சிறுமி இறந்தாளா, அல்லது மர்ம காய்ச்சலால் இறந்தாளா? என விசாரணை நடக்கிறது. இதுபோல் குலசேகரன்பட்டினம் தோப்பார்கடை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 10 மாத குழந்தை முகமதுவை, காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று குழந்தை இறந்தது. இதுபோன்று பல குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.