புதுடெல்லி: சமூக சேவகர் அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் மூத்த உறுப்பினராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்ததை அடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு அன்னா குழுவில் இருந்து விலகிய அரவிந்த், புதிய கட்சி தொடங்கினார். கட்சிக்கு பெயர் எதுவும் சூட்டவில்லை. இந்நிலையில், புதிய கட்சி நிறுவன உறுப்பினர்கள் 300 பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் ‘ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டது. முறைப்படி கட்சியின் தொடக்க விழா நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என அரவிந்த் தெரிவித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை தேர்வு செய்ய இன்று மாலை கட்சி செயற்குழு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், கட்சியின் நீண்ட கால திட்டம் குறித்து செயற்குழு உறுப்பினர் யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘கட்சியில் விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கமிட்டிகள் உருவாக்கப்படும் என்றார். டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தான் தங்கள் முதல் நோக்கம் என்றும், அதன்பிறகு 2014-ல் மக்களவை தேர்தலையும் சந்திப்போம் என கட்சியினர் தெரிவித்தனர்.