துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் : தாணு தகவல்
சென்னை: நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம் தீபாவளிக்கு வெளியானது. அதில் முஸ்லிம்கள் தேசபக்திக்கு எதிரானவர்கள் என்று சித்தரிக்கும் காட்சி இருப்பதாக கூறி நீலங்கரையில் உள்ள விஜய் வீட்டு முன்பு முஸ்லிம் அமைப்புகள் முற்றுகையிட்டனர். அந்த காட்சிகளை நீக்காவிட்டால் துப்பாக்கி படம் ஓடும் தியேட்டர்கள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். இதையடுத்து விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், படத்தின் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் நேற்று முன்தினம் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபாலை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கேட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தயாரிப்பாளர் தாணு, சந்திரசேகரன் ஆகியோர் சந்தித்து பேசினர். அதன் பிறகு நிருபர்களிடம் தாணு கூறியது: துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்கள் மனவருத்தம் அடையும் வகையில் சில காட்சியில் வசனங்கள் இடம் பெற்று இருப்பதாக முஸ்லிம் அமைப்பினர் கூறினர். இது பற்றி முஸ்லிம் அமைப்புகளுடன் கலந்து பேசி 5 இடத்தில் அந்த காட்சிகளை நீக்கி உள்ளோம். சென்சார் போர்டுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இந்த காட்சிகள் பற்றிய சிடிகளை முஸ்லிம் அமைப்புகளிடம் இன்று மாலை வழங்க இருக்கிறோம். இவ்வாறு தாணு கூறினார்.