தலையை நசுக்கி வாலிபர் படுகொலை : மர்ம உறுப்பை அறுத்து வெறிச்செயல்
தாம்பரம்: மர்ம உறுப்பை அறுத்து தலை நசுக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பல்லாவரம் அருகே நள்ளிரவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரம் அடுத்த கவுல் பஜாரில் அரசு மேல்நிலை பள்ளியின் பின்புறம் காலி மைதானம் உள்ளது. இது விமான நிலைய சுற்றுச்சுவரையொட்டி உள்ளது. இப்பகுதியில் இன்று அதிகாலை இயற்கை உபாதையை கழிக்க சிலர் சென்றனர். அப்போது, ஒருவர் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அதை பார்த்ததும் பதறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். டி ஷர்ட், பேன்ட் அணிந்திருந்தார். தலை நசுக்கப்பட்டிருந்தது. அருகில் ஹாலோ பிளாக் கற்கள் கிடந்தன. அதில் ரத்தக்கறை படிந்திருந்தது. மது பாட்டில், டம்ளர், செருப்பு கிடந்தது. கையில் ஆர்.சாரதா என பச்சை குத்தப்பட்டிருந்தது. அவருடைய மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டிருந்தது. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
அது சிறிது தூரம் ஓடிவிட்டு திரும்பியது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மர்ம உறுப்பு வெட்டப்பட்டிருப்பதால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஓடஓட விரட்டி கொலை நடந்திருக்கிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.