சத்துணவு ஊழியரிடம் கைவரிசை : வழிப்பறியில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
ஊத்துக்கோட்டை: சத்துணவு ஊழியர் உள்பட பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அருகே மணவாளநகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி சசிகலா (44), ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு நிதிநாடும் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியராக இருக்கிறார். நேற்று மாலை ஊத்துக்கோட்டை பஜாரில் உள்ள கடையில் காய்கறி வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், சசிகலா வைத்திருந்த பர்சை எடுத்துக்கொண்டு ஓடினார். இதை பார்த்தவர்கள் அவரை விரட்டினர். ஆனால் அவர் தப்பிவிட்டார். புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்.ஐ. நரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்தனர். பஜாரில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆந்திர மாநிலம் வெல்லூர் பகுதியை சேர்ந்த சாமந்தி (45), கீழபூண்டி சாந்தி 45), நல்லாட்டூர் காலனியை சேர்ந்த நதியா (24) என்றும் பஜார் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண்களிடம் பணம், நகை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன், கொலுசு மற்றும் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.