திருச்சி: கோர்ட்டில் ஜாமீன் பெற போலி ஆவணம் தயாரித்து கொடுத்த தாய், மகன் உள்பட 4 பேரை திருச்சி போலீசார் கைது செய்தனர். திருச்சி நடுவண்ணாரபேட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரி (33). திருட்டு வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட இவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். ஈஸ்வரி, போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்து ஜாமீன் பெற்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன் போலீசார் ஈஸ்வரி வீட்டுக்கு சென்று நேற்று சோதனை நடத்தினர். அங்கு, குற்றவாளிகளை ஜாமீனில் வெளியே எடுப்பதற்காக போலியான பட்டா, வருமானம் மற்றும் இருப்பிட சான்றுகள், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய 65 போலி சீல்கள், போலி ரேஷன் கார்டுகள், போலி பட்டா, போலி வீட்டு வரி ரசீதுகள் உள்ளிட்ட 3200 ஆவணங்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார், ஈஸ்வரியை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, புத்தூர் நடுவண்ணாரை பேட்டையை சேர்ந்த குறைசா பேகம் (55) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குறைசாபேகம், அவரது மகன் முகமதுகனி (32), தங்கை மகன் சாகுல் அமீது ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். குறைசா பேகத்திடம் போலீசார் விசாரித்தபோது, தங்களை போலவே திருச்சியில் மேலும் 5 கும்பல் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், திருச்சி மட்டுமின்றி பிற நகரங்களிலுள்ள கோர்ட்டிலும் ஜாமீன் பெற அந்த ஆவணங்களை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இந்த நெட்வொர்க்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook