மதுரை: தேவர் குருபூஜைக்கு சென்று திரும்பியவர்கள் கார் மீது மதுரை ரிங் ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் இன்று அதிகாலை இறந்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. பதற்றம் நீடிப்பதால், மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்று திரும்பிய 3 பேர் பரமக்குடியில் கடந்த 30ம் தேதி கொல்லப்பட்டனர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. மதுரை மாவட்டம், விரகனூர் அருகேயுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் குருபூஜைக்கு சென்றுவிட்டு அருப்புக்கோட்டை வழியாக மதுரை வந்து கொண்டிருந்தனர். அவர்களை சிந்தாமணி அருகே ரிங்ரோட்டில் வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கார்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. கார் தீப்பற்றியதில் அதில் இருந்த விஷ்ணுப்பிரியன், அமர்நாத், ரஞ்சித்குமார், முத்துக்கிருஷ்ணன், தேசிங்குராஜா, சதீஷ், பிரபு, ஜெயபாண்டி, சூர்யா, அமர்நாத், செந்தில்முருகன் உள்பட 20 பேர் உடல் கருகினர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயபாண்டி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் (18) சுந்தரபாண்டி (20) ஆகியோர் இன்று அதிகாலை இறந்தனர். மூன்று பேர் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால், மருத்துவமனை வளாகம் மற்றும் வாலிபர்களின் சொந்த ஊரான புளியங்குளம் பகுதி மக்கள் குவிந்தனர். பதற்றத்தைத் தணிக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூன்று பேரின் சொந்த ஊரான புளியங்குளம், மதுரை , ராமநாதபுரம் சாலையில் உள்ளது. இங்கு பதற்றம் நிலவுவதால், மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்தை போலீசார் இன்று காலை முற்றிலுமாக தடை செய்தனர். இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook