ஐதராபாத்: நிலம் புயலால் ஆந்திராவில் தொடர் மழை பெய்து வருகிறது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. வங்க கடலில் உருவான நிலம் புயல் கடந்த புதன்கிழமை மாலையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. பின்னர் வலுவ¤ழந்தது ஆந்திரா, தெற்கு கர்நாடகா நோக்கி நகர்ந்தது. இந்த புயலால் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகபட்டினம், விஜயநகரம், கம்மம், அடிலாபாத் ஆகிய மாவட்டங்கள் கடந்த 4 நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இம்மாவட்டங்களில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. மழை நிலவரம் குறித்து முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தலைமை செயலாளர் மின்னி மேத்யூ மற்றும் மற்ற அதிகாரிகளுடன் விசாகப்பட்டினத்தில் ஆலோசனை நடத்தினார். மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் நிலைமையை தீவிரமாக கண்காணிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார். நிலம் புயலால் கர்நாடகாவிலும் மழை பெய்து வருகிறது. அங்குள்ள பெல்லாரி மாவட்டத்தில் பலத்த மழைக்கு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. மாடுகள், ஆடுகள் மழைக்கு பலியாகி உள்ளன. ஹம்பியில் உள்ள உலக பாரம்பரிய சின்னமான விருபக்ஷா கோயில் அருகே உள்ள சாலு மண்டபம் இடிந்து விழுந்தது. இதையடுத்து தொல்பொருள் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூரிலும் கனமழை பெய்து வருகிறது.