சாண்டி புயல் புரட்டி போட்டதால் நியூயார்க் மராத்தான் ஓட்டம் ரத்து
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் மராத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நவம்பரில் இந்த மராத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள். இந்நிகழ்ச்சியை காண பல நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் நியூயார்க் வருவார்கள். இந்த நகரில் வசிக்கும் மக்களின் மன உறுதி, ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த மராத்தான் நடக்கிறது. இந்த ஆண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், சாண்டி புயலால் நியூயார்க் நகரம் பெரும் பாதிப்படைந்துள்ளதால், நிகழ்ச்சியை ஒத்திவைக்கும்படி பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் கூறுகையில், Ôமுதலில் திட்டமிட்டபடி மராத்தான் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், நகரில் பல இடங்கள் சாண்டி புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால், நிகழ்ச்சியை ரத்து செய்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மராத்தான் நடத்தலாம் என்றும் ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் கூறினர். அதன்படி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதுÕ என்றார்.