ஆந்திராவில் நிலம் புயலுக்கு 77,000 ஹெக்டேர் பயிர் நாசம்
ஐதராபாத்: ஆந்திராவில் நிலம் புயலுக்கு 77 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகி உள்ளதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி தெரிவித்தார். வங்க கடலில் உருவான நிலம் புயல், கடந்த புதன்கிழமை மாலையில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. பின்னர் வலுவிழந்து ஆந்திரா, தெற்கு கர்நாடகா நோக்கி நகர்ந்தது. இதனால் ஆந்திராவின் அனந்தபூர், பிரகாசம், கிழக்கு கோதவரி, நெல்லூர், கம்மம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
தொடர் மழையால் 77 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக மாநில வருவாய் துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி தெரிவித்தார். புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து அவர் கூறுகையில், ‘ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் 77 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடிந்ததும் சேதத்தை கணக்கிட்டு அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். மழையில் மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்தும் மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும். 450 மின்கம்பங்கள் சரிந்துள்ளன. பிரகாசம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 5000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.