சொந்த மனைவி பற்றி கேட்டால் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? : திக்விஜய் சிங்
சிம்லா: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி குறித்து விமர்சனம் செய்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனது மனைவி குறித்து மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கேட்டுள்ளார். இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலையொட்டி, சில நாட்களுக்கு முன்பு அங்கு பிரசாரம் நடந்தது. அதில் பங்கேற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியை 50 கோடி ரூபாய் காதலி என்று விமர்சித்தார்.
இதற்கு சசிதரூர் கடும் கண்டனம் தெரிவித்தார். தன் மனைவி விலை மதிப்பற்றவர் என்று கூறிய சசிதரூர், காதலை பற்றி அறியாதவர் மோடி என்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், Ôசசிதரூர் மனைவி குறித்த மோடியின் விமர்சனம், நாட்டில் உள்ள ஒட்டு மொத்த பெண்களையுமே சிறுமைப்படுத்தும் வகை யில் உள்ளது. நீங்கள் யூ-டியூபில் சென்று தேடினால் நரேந்திர மோடியின் மனைவி பெயர் யசோதா பென் என்று பார்க்க முடியும்.
ஆனால், மோடி பிரம்மச்சாரி என்று பொதுவான கருத்து உள்ளது. சொந்த மனைவி குறித்து மோடி மவுனம் சாதிப்பது ஏன்Õ என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தலைவர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வரும் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கூறும்போது, ‘பாஜ தலைவர் கட்கரி மீதான பெரிய முறைகேடு புகார்கள் குறித்து அரவிந்த் எதுவும் வாய் திறப்பது இல்லை. ஏனென்றால் அவரும் அவரது தொண்டர்களும் கட்கரியுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் என்றார்.