சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 68. இங்கு ஆளும் பா.ஜ.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் 68 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 66 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 459 பேர் களத்தில் உள்ளனர். தற்போதைய முதல்வர் பி.கே.துமல், ஹமிர்பூர் தொகுதியிலும், காங்கிரஸ் முக்கிய வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபத்ர சிங், சிம்லா (ரூரல்) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பா.ஜ. சார்பில் மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
கடந்த சில நாட்களாக அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 46 லட்சம் வாக்காளர்களுக்காக 7,253 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தோ - திபெத் எல்லை படை, மத்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்பு படையினருடன் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 13, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இரு மாநிலத்திலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 20-ம் தேதி எண்ணப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook