ராஜினாமா கடிதத்தில் போலி கையெழுத்தா? சுப்ரீம் கோர்ட்டில் பிரணாப் முகர்ஜி மறுப்பு
புதுடெல்லி: ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஜூலை மாதம் தேர்தல் நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மா தோல்வியை தழுவினார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் வகித்து வந்த நிதியமைச்சர் பதவி உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் பிரணாப் ராஜினாமா செய்தார். இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக பிரணாப் அனுப்பியிருந்த கடிதத்தில் அவரது கையொப்பம் வித்தியாசமாக இருந்தது. இதனால், அந்த கடிதத்தில் இருப்பது போலி கையெழுத்து என பி.ஏ.சங்மா குற்றம் சாட்டினார்.
இதன் அடிப்படையில் பிரணாப்பின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அப்போதே கோரிக்கை வைத்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. தேர்தல் கமிஷனும் ஏற்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யுங்கள் என பி.ஏ. சங்மாவுக்கு தேர்தல் கமிஷன் ஆலோசனை வழங்கியிருந்தது. அதன்படி, தேர்தல் தோல்விக்கு பிறகு பிரணாப் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பி.ஏ.சங்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்து தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது.
அப்போது பிரணாப் சார்பாக மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே ஆஜராகி, இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பதவி ராஜினாமா கடிதத்தில் இருப்பது பிரணாப்பின் கையெழுத்துதான். அது போலியானது அல்ல. முக்கியமான ஆவணங்களில் பிரணாப் முகர்ஜி என்ற முழு பெயர் அடிப்படையில் பிரணாப் கையெழுத்திடுவார். சில சமயங்களில் பி.கே.முகர்ஜி என சுருக்கமாகவும் அவர் கையெழுத்திடுவது உண்டு. இதற்கு முன்பு பல கடிதங்களில் அவர் இவ்வாறு சுருக்கமாக கையெத்திட்டுள்ளார். இரண்டு விதமாக கையெழுத்திடும் பழக்கம் பலருக்கு உள்ளது என வாதிட்டார். இதை பி.ஏ.சங்மா வக்கீல் ராம் ஜெத்மலானி கடுமையாக எதிர்த்தார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.