ரயில் பயணம் செய்வோருக்கு அடையாள அட்டை கட்டாயம் : ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் அனைவரும் இனி கட்டாயம் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். வரும் டிசம்பர் 1 முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. இருப்பினும் இதற்கான முன்பதிவு அறிவித்த சில மணி நேரங்களில் முடிந்து விடுகிறது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விடும். டிக்கெட் வாங்க ரயில் நிலையங்களுக்கு செல்லும் மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏஜென்ட்கள் ஆன்லைனில் மொத்தமாக புக்கிங் செய்வதால் ஆன்லைன் வசதியில்லாத சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து புக்கிங் தொடங்கும் நாளில் குறிப்பிட்ட நேரம் வரை ஏஜென்ட்கள் புக்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆள் மாறாட்டங்களை தவிர்க்க இ-டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் வாங்குவோர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதே போல் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோரும் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே உத்தரவு உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்து பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் என ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.