ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற அம்மா கைது
லாகூர்: பாகிஸ்தானில் மருத்துவ செலவு, வீட்டு வாடகைக்காக ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தாயை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் குஜ்ரன்வாலா மாவட்டத்தை சேர்ந்த பெண் கலீதா பீபி. இவருக்கு பைஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இதயம் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டு வந்தார் கலீதா.
சிகிச்சைக்காகவே வருமானம் மொத்தமும் செலவானதால் குடும்பம் வறுமையில் வாடியது. 8 மாதமாக வீட்டு வாடகையும் கொடுக்க முடியாமல் தவித்தார். குழந்தையையும் கவனிக்க முடியவில்லை. இதனால் தனது ஒரே மகனான பைஜானை, முகமது சாகுத் என்பவருக்கு ரூ1.2 லட்சத்துக்கு விற்க முடிவு செய்தார். இதுதொடர்பான செய்தி டிவி சேனல்களில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர்.