குஜராத்தில் பிரசாரம் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் மறுப்பு
பாட்னா, :குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஐக்கிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யப் போவதில்லை என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. பீகாரை சேர்ந்த பாஜ தலைவர்கள் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய நரேந்திரமோடி தடை விதித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலின் போது அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் தடை விதித்தது. இதற்கு பீகாரில் உள்ள பாஜ தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது பீகார் பாஜ தலைவர்களுக்கு மோடி தடை விதித்திருப்பதாக அகமதாபாத் பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் குஜராத்தில் தனித்து போட்டியிடுகிறது. 30 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த முறையும் ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்போது குஜராத்தில் ஐக்கிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த முறையும் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், குஜராத்தில் பிரசாரம் செய்ய மாட்டேன் என நிதிஷ்குமார் நேற்று அறிவித்தார். நவம்பர் 29 முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாலும், நல்லுறவு அடிப்படையில் ஒரு வாரம் பாகிஸ்தான் செல்லவிருப்பதாலும் இந்த முறை குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.