சென்னை: அடகு கடைகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மடிப்பாக்கத்தில் நடந்த கொலையில், குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் ஸ்ரீ பாலாஜி பேங்கர்ஸ் ஜுவல்லர்ஸ் என்ற அடகு கடை நடத்தி வருபவர் மோகன்லால். இவரது வீடு புழுதிவாக்கம் யோகேஸ்வரன் தெருவில் உள்ளது. 6 மாதத்துக்கு முன்பு ராஜஸ்தான் பாலி மாவட்டம் சேந்துரா கிராமத்தை சேர்ந்த மதன்சிங் (16) என்பவர் அடகு கடையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று காலை கடையை திறந்து வியாபாரம் செய்தனர். மதியம் கடையை மூடிவிட்டு சாப்பிடுவதற்கு மோகன்லால், மதன்சிங் இருவரும் வீட்டுக்கு சென்றனர்.
மதன்சிங்கிடம் கடை சாவியை கொடுத்து விட்டு, மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் மோகன்லால். மாலை 4 மணியளவில் மோகன்லால் கடைக்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், மதன்சிங்கை கத்திமுனையில் மிரட்டி லாக்கர் அறைக்குள் இழுத்து சென்று பலமாக தாக்கி, கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் மதன்சிங் அங்கேயே இறந்தார். கடையில் 3 கிலோ நகைகளை கொள்ளை அடித்து தப்பினர். போகும் போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவையும் எடுத்து சென்றனர். புகாரின்படி மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த சதாசிவம் நகர் வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டமும் உள்ள பகுதி.
இந்த கடைக்கு அருகில் எலக்ட்ரிக்கல் கடையும், ஜெராக்ஸ் கடையும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காரப்பாக்கத்தில், அடகு கடையில் புகுந்த கும்பல், கடை உரிமையாளரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்றது. அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இப்போது, மடிப்பாக்கத்தில் ஊழியரை கொலை செய்து கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை கும்பல் ஒரே நாளில் இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது. பல நாட்களாக கண்காணித்து கொள்ளை அடித்திருக்க வேண்டும். இதனால் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது நடமாடினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரவாயலில் இதேபோல கடை உரிமையாளரை கொலை செய்து கொள்ளை அடித்து சென்ற வாலிபரை கைது செய்தனர். அவருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்கின்றனர். கடைகள் அடைப்பு அடகு கடையை பார்வையிட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், ‘அடகு கடைகளில் அடிக்கடி கொள்ளை நடக்கிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும்Õ என்று வேண்டுகோள் விடுத்தார். கொலை, கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வியாபாரிகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அடகு கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் தர்மிசந்த் தலைமையில் வந்தவர்கள், குற்றவாளியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.