மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நடிகை சுபா திடீர் மரணம்
சென்னை: மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நடிகை சுபா காலமானார். அவருக்கு வயது 21. சமீபத்தில் ரிலீசான ‘மாலைபொழுதின் மயக்கத்திலே‘ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுபா புட்டேலா. வயது 21. பஞ்சாபிலுள்ள லூதியானாவை சேர்ந்த சுபா புட்டேலா, குடும்பத்துடன் பெங்களூருவில் குடியேறினார். அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த அவர், இந்திய அளவில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்றார். பிறகு மாடலிங்கில் ஈடுபட்டார். கன்னடத்தில் நடித்த அவரை ‘மாலைபொழுதின் மயக்கத்திலே‘ மூலம் தமிழில் நடிக்க வைத்தனர்.
சிறுநீரகப் பிரச்னை காரணமாக பெங்களூரிலேயே சிகிச்சை பெற்று வந்தார் சுபா புட்டேலா. திடீரென்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு மரணம் அடைந்தார். அவரது உடல் லூதியானாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது. சுபா புட்டேலாவுக்கு பெற்றோர், ஒரு சகோதரர், ஒரு சகோதரி உள்ளனர்.