ராணுவ மருத்துவமனையில் அவலம் : ராணுவ அதிகாரி விரலை எலிகள் கடித்து குதறின
புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா நகரில் கடந்த மாதம் 25ம் தேதி தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் தீவிரவாதிகள் சுட்டதில் 24 வயது லெப்டினன்ட் ஒருவரின் தண்டுவடத்தில் குண்டு பாய்ந்தது. இதில் அவருக்கு இடுப்பு கீழே செயலிழப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்து, சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை ராணுவ அதிகாரி கால் விரலில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதை மருத்துவமனை ஊழியர் பார்த்துள்ளார்.
பின்னர் நடத்திய பரிசோதனையில் கால்விரல்களை எலிகள் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. ராணுவ அதிகாரிக்கு இடுப்புக்கு கீழ் செயலிழந்து விட்டதால் எலி கடித்தது அவருக்கு தெரியாமலே இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரேபிஸ் நோயை தடுக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் எலிகள் தொல்லை இருப்பதாக ஏற்கனவே புகார்கள் வந்தாலும் நோயாளியை எலிகள் கடித்து குதறி இருப்பது இதுதான் முதல்முறை என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.