உலககோப்பை 20,20 அரையிறுதியில் கொழும்பில் நேற்று இலங்கை , பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்தது. ஜெயவர்த்தனே 36 பந்தில் 7 பவுண்டரியுடன் 42 ரன்னும், தில்ஷான் 35, சங்ககரா 18, ஜீவன் மென்டிஸ் 15, பெரேரா 11, மேத்யூஸ் 10 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சையது அஜ்மல், அப்ரிடி, முகமது ஹபீஸ், உமர்குல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். எளிதான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி மந்தமாகவே ரன் சேர்த்தது. ஆரம்பத்தில் இலங்கை பந்துவீச்சாளர்கள் அதிக உதிரிகளையும், ஒரு சில கேட்ச்களையும் கோட்டை விட்டனர். எனினும் பாக். வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இம்ரான் நசீர் 20, நசீர் ஷம்சேத் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய கம்ரன் அக்மல் 1, மாலிக் 6, அப்ரிடி 0 ரன்களில் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையை கட்டினர். நிதானமாக ஆடி வந்த முகமது ஹபீஸ் 40 பந்தில் 42 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் ஆனார். கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் பாகிஸ்தான் அணியால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 3, மென்டிஸ், மேத்யூஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது ஜெயவர்த்தனேவுக்கு வழங்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook